திங்கள், 1 ஜூலை, 2024

முப்பெரும் குற்றவியல் சட்டங்கள் விவகாரம். இன்று முதல் ஐந்து நாட்களுக்கு நீதிமன்ற பணிகளில் இருந்து விலகப் போவதாக சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர whatsapp செயற்குழு கான்பரன்ஸ் கூட்டத்தில் முடிவு.

முப்பெரும் குற்றவியல் சட்டங்கள் விவகாரம். இன்று முதல் ஐந்து நாட்களுக்கு நீதிமன்ற பணிகளில் இருந்து விலகப் போவதாக சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர whatsapp செயற்குழு கான்பரன்ஸ் கூட்டத்தில் முடிவு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

முப்பெரும் குற்றவியல் சட்டத்திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி இன்று முதல் 5  நாட்களுக்கு சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகல்.

இந்திய அரசு கொண்டுவந்துள்ள முப்பெரும் குற்றவியல் சட்டங்களில் சில மாற்றங்கள் செய்து இந்தி திணிப்பையும் மேற்கொண்டுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் ஆங்காங்கே வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் உள்ள நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் மற்றும்  உறுப்பினர்கள் அனைவரும் நீதிமன்ற பணிகளில் இருந்து கடந்த ஜூன் 27ம் தேதிவிலகிக் கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த ஜூன் 26ம் தேதி இரவு ஆல் இந்தியா பார் கவுன்சில் ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்திய அரசு கொண்டுவந்துள்ள முப்பெரும் குற்றவியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட திருத்தங்களை திரும்பப் பெறுவதற்கு உண்டான முன் முயற்சியை ஆல் இந்தியா பார் கவுன்சில் முன்னெடுக்கும் என்ற என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில், சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க அவசர செயற்குழு கூட்டம் அந்த சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் இமயவரம்பன் தலைமையில் கூடிய அவசர பொதுக்குழு கூட்ட முடிவின்படி, சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் நீதிமன்ற பணிகளுக்கு கடந்த 27-6-24 பணிக்கு திரும்பினார்.
 
இந்த நிலையில், சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க அவசர செயற்குழு வாட்ஸ் அப் கான்ப்ரன்ஸ் வாயிலாக நேற்று 1-7-24 இரவு 10 மணிக்கு நடைபெற்றது. சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் இமயவரம்பன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் 11 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கான்பரன்ஸ் கூட்டத்தில்  2-7-24 ம் தேதி முதல் 6-7-24 ம் தேதி வரை நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்கிற கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் 2-7-24 முதல் 6-7-24 ம் தேதி வரை நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும்,  அனைத்து உறுப்பினர்களும் 2-7-24 முதல் 6-7-24ம் தேதி வரை  நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருக்க வேண்டுகிறோம் என அந்த சங்கத்தின் தலைவர் இமயவரம்பன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மனு

ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மனு

ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (1ம் தேதி) நடைபெற்றது. இக்கூட்டத்தில், பெருந்துறை அருகே பத்திரம் இருந்தும் வீட்டு நிலத்திற்கு பட்டா இல்லை எனக்கூறி நூற்றுக்கும் மேற்பட்டோருடன் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள தமிழ் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அந்த இடத்திற்கு கிரையம் செய்து மின் இணைப்பு மற்றும் குடிநீர் வழங்கி குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்கள் குடியிருக்கும் இடத்தில் நிபந்தனை பட்டா இருந்த காலத்தினால் பட்டா வழங்குவதற்கு சில நிபந்தனைகள் இருந்தன. அந்த இடத்தின் நிலைமை என்ன என்று தெரியாமல் இருந்த அப்பகுதி மக்கள், அதே போல வறுமைக் கோட்டுக்கு கீழே இருந்ததால் ஒருமுறை வரைமுறைப்படுத்தும் சட்டப்படி இவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.

தற்போது, அந்த இடத்திற்கு ஜீரோ வேல்யூவேஷன் என்ற முறையில் பட்டா இல்லாமல் இருந்து வருகிறது. இந்த இடத்திற்கு அப்போது மாவட்ட ஆட்சியர்தான் வழங்கினார், ஆனால், ஏன் ஜீரோ வேல்யூவேஷன் நிலமாக மாறியது என்று கேள்வி எழுப்பிய மக்கள், இந்த இடத்தை வங்கியின் மூலம் கடன் பெற்று வீடு கட்ட முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. எனவே, இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார், என்றார்.
ஈரோடு மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

ஈரோடு மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

மத்திய அரசு குற்றவியல் சட்டங்களின் பெயரையும், சில சட்டங்களையும் மாற்றியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் புதிய சட்டம் இன்று (1ம் தேதி) முதல் அமுலுக்கு வந்தது. இதனை கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
அதன்படி, சட்ட திருத்தத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, கொடுமுடி, அந்தியூர், பவானி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோபிசெட்டிபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க தலைவர் காளத்திநாதன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் மாவட்டம் முழுவதும் 1,300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. போராட்டத்தின் அடுத்த கட்டமாக நாளை (செவ்வாய்க்கிழமை) அந்தந்த நீதிமன்றம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.7.68 லட்சத்தில் நலத்திட்ட உதவி

ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.7.68 லட்சத்தில் நலத்திட்ட உதவி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (1ம் தேதி) நடைபெற்றது.

இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 368 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.

மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, பல்வேறு நிகழ்வுகளினால் உயிரிழந்தவர்களின் 7 வாரிசுதார்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.7 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தின் மூலம் இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவித்தொகையாக 4 நபர்களுக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் ரூ.68 ஆயிரத்துக்கான காசோலைகளையும் என மொத்தம் ரூ.7.68 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரும், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) (பொ) ராஜகோபால், உதவி ஆணையர் (கலால்) ஜீவரேகா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 30 ஜூன், 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பொதுக்குழு தீர்மானம்

மாற்றுத்திறனாளிகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பொதுக்குழு தீர்மானம்

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கத்தின் 14ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஈரோடு செல்லாயம்மாள் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் முரளி வரவேற்றார். சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட தலைவர் பழனிவேல்ராஜன் முன்னிலை வகித்தார்.


கூட்டத்தில், வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் மாநில கூட்டமைப்பு சார்பில் ஈரோடு மாவட்டத்தில் சுயவரம் நடத்தி தேர்வு செய்யப்படும் ஜோடிகளுக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் திருமணம் முடித்து வைத்து இப்போது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 4 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் ரூ 60 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை உடன் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

மாற்றுத்திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து திட்டங்களுக்கும் 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆந்திரா மாநிலத்தில் இருப்பதை போல அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி தொகை ரூ 3,000 ஆகவும், அறிவுத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 5,000 வழங்க வேண்டும்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தனியாக நரம்பியல் மருத்துவர் நியமிக்க வேண்டும் என மேற்கண்ட தீர்மானங்கள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில், ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நல சங்க செயலாளர் செந்தில்குமார் பொருளாளர் நவநீத கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் என்ஐஏ சோதனை நிறைவு: செல்போன்கள், பென்டிரைவ் பறிமுதல்

ஈரோட்டில் என்ஐஏ சோதனை நிறைவு: செல்போன்கள், பென்டிரைவ் பறிமுதல்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று (30ம் தேதி) தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஒரு பகுதியாக ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட செட்டிப்பாளையம் அருகே அசோக் நகர் ஆறாவது தெருவில் உள்ள சர்புதீன் வீட்டிலும், பெரியார் நகரில் அருகே எஸ்.கே.சி சாலையில் உள்ள முகமது ஈசாக் என்பவர் வீட்டிலும் என்ஐஎ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக கூறப்பட்ட நிலையில், திருப்பூரில் இருந்து மூன்று கார்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் ஈரோட்டில் இரண்டு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையின் நிறைவில், சோதனையில் நடத்தப்பட்டவர்களிடம் இருந்து செல்போன், டாக்குமெண்ட், முகமது ஈசாக் இடமிருந்து செல்போன், இரண்டு பென்டிரைவ் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், சர்புதீன் என்பவரை வருகின்ற 4ம் தேதியும், முகமது ஈசாக் என்பவரை வருகின்ற 2ம் தேதி, சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அழைத்துள்ளனர்.
சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் 40வது ஆண்டு மாணிக்க விழா.... உச்ச நீதிமன்ற நீதி அரசர்கள் பங்கேற்பு.

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் 40வது ஆண்டு மாணிக்க விழா.... உச்ச நீதிமன்ற நீதி அரசர்கள் பங்கேற்பு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் சென்ட்ரல் சட்ட கல்லூரியின் 40வது ஆண்டு மாணிக்க விழா மற்றும் கல்லூரியை நிறுவிய பேராசிரியர் தனபாலன் திருவுருவை சிலை திறப்பு விழா ஆகியவை சேலத்தில் இன்று நடைபெற்றது. 

தமிழகத்தின் முதல் தனியார் சட்டக் கல்லூரியில் சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரி கடந்த 1980 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. கல்லூரியின் 40வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் மாணிக்க விழா மற்றும் கல்லூரியை நிறுவிய பேராசிரியர் தனபாலன் அவர்களின் திருஉருவச் சிலை திறப்பு விழா ஆகியவை, சேலம் உடையாபட்டி பகுதியில் உள்ள தனியார் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 

இந்த விழாவில், உச்ச நீதிமன்ற நீதி அரசர்கள் சுந்தரேஷ் மற்றும் விஸ்வநாதன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் மகாதேவன், நீதி அரசர்கள் செந்தில்குமார் மற்றும் அருள்முருகன், தமிழ்நாடு நீதித்துறை, சட்டத்துறை, சிறைத்துறை மற்றும் ஊழல் தடுப்பு துறை அமைச்சர் ரகுபதி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் செல்வகணபதி, மூத்த வழக்கறிஞரும் அகில இந்திய பார் கவுன்சில் துணை தலைவருமான பிரபாகரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கர்னல் சந்தோஷ் குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சேலம் சென்ட்ரல் மத்திய சட்ட கல்லூரியை நிறுவிய பேராசிரியர் தனபால் அவர்களுக்கு புகழாரம் சூட்டிய சிறப்பு விருந்தினர்கள், அவரது திருவுருவ சிலையையும் திறந்து வைத்தனர். 
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் உச்ச நீதிமன்ற நீதிஅரசர் சுந்தரேஷ் விழாவில் பேசுகையில், குற்றங்களை தடுப்பது அரசின் கடமை,
குற்றங்களை தடுப்பதும், தண்டிப்பதும் அரசின் கடமை 
அதை சரிவர செய்யாவில்லை என்றால் பாதிப்பு அரசுக்குதான்
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் நீதிதுறையில் எதிர்கொள்ள வேண்டிய  சவால்கள் அதிகம் உள்ளன
சட்டம் பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
இன்னும் 20 ஆண்டுகளில் 70 முதல் 80 சதவிகிதம் பெண்கள் நீதித்துறையில் பணியாற்றுவார்கள் 
தமிழும், நீதியும் சட்டமும் ஒன்று ; உலகத்திற்கே நீதி சொன்ன மொழி தமிழ்மொழி
சேலத்தில் நடைபெற்ற தனியார் சட்டக்கல்லூரி விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேசினார்.
 தொடர்ந்து பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 77 நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன
பெருகி வரும் வழக்குரைஞர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக நீதிமன்றங்கள் திறக்கப்படும்
தமிழக அரசு நீதித்துறைக்கு உறுதுணையாக இருக்கும்
சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் நீதிதுறையின் செயல்பாடு மிக முக்கியம்
நீதித்துறையின் தேவைகளை எந்த அளவு பூர்த்தி செய்ய முடியுமோ அந்த அளவு பூர்த்தி செய்வோம்
சேலம் தனியார் சட்டக்கல்லூரி விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசினார்.
 இந்த விழாவில் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த ஏராளமான சட்ட வல்லுனர்கள் பங்கேற்றனர்.