அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (2ம் தேதி) அம்மாபேட்டை பேரூராட்சி, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் சிங்கம்பேட்டை, குருவரெட்டியூர் மற்றும் பட்லூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், சிங்கம்பேட்டை ஊராட்சியில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில், ரூ.2.38 லட்சம் மானியத்தில் 2.38 ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு மானிய விலையில் தக்கை பூண்டு விதைகள் மற்றும் 2 விவசாயிகளுக்கு மக்காச்சோளம் படைப்புழுவினை கட்டுப்படுவதற்குண்டான வேளாண் இடுபொருட்களை அவர் வழங்கினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமைப் போர்வைக்கான இயக்கம் சார்பில் மகோகனி மரம் நடப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, அம்மாபேட்டை பேரூராட்சி வார்டு -15, குபேரன் நகரில் கலைஞர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டு வருவதையும், மேலும், நபார்டு திட்டத்தின்கீழ் பட்டன்சாவடி முதல் செலம்பனூர் வழியாக கால்நடை மருத்துவமனை வரை ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, லட்சுமிபுரம் பகுதியில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.27.53 கோடி மதிப்பீட்டில் 464 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதையும், குருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.1.10 லட்சம் மதிப்பீட்டில் மெய்நிகர் வகுப்பறை கட்டப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, குருவரெட்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பொதுமக்களுக்கு கடன் வழங்குதல், கணினியில் பதிவு செய்தல் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பட்லூர் ஊராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் நூலகக் கட்டிடம் கட்டும் பணியினையும், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடம் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வுகளின் போது, துணைப் பதிவாளர் (தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்) முத்து சிதம்பரம், உதவி பொறியாளர் (தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம்) பிரசன்னா, அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதா மணி, சுமித்ரா, உதவி இயக்குநர் (வேளாண்மைத்துறை) ஜெயகுமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.