சென்னை தலைமைச் செயலகத்தில், இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளையின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி கொடுப்பதற்காக ஆருயிர் அனைவரும் உயிர் காப்போம் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சாலை விபத்துகள், தொழில்சார் ஆபத்துகள், இதய அவசரநிலைகள், பக்கவாதம் போன்றவை உலகளவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற நேரங்களில், ஒவ்வொரு நொடியும் நோயாளியின் உயிரைக் காப்பாற்றும் பொன்னான நேரமாகும். நோயாளி மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே, தனிநபர்கள் தேவையான உயிர்காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள, மக்களிடையே அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி பற்றிய போதுமான அறிவு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றியமையாதது ஆகும். இதுபோன்ற நெருக்கடியான நேரங்களில், தாமதமின்றி இதய துடிப்பு மற்றும் சுவாசத்தை சரிபார்க்கவும். மார்பு அழுத்தம் மற்றும் வாயிலிருந்து வாய் சுவாசம் தொடங்கவும் ஆருயிர் அனைவரும் உயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும்.
இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளையின் 170 கிளைகளிலும் உள்ள சுமார் 42,000 மருத்துவர்கள் இந்த பயிற்சி பணியில் ஈடுபடுவார்கள். இதன்மூலம் தமிழ்நாட்டின் உள்ள அனைவருக்கும் இப்பயிற்சியை அளித்து நமது மாநிலத்தை 100 சதவிகிதம் அடிப்படை உயிர் காக்கும் பயிற்சி தெரிந்த மக்கள் கொண்ட மாநிலமாக ஒரு வருட காலத்திற்குள் மாற்றிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சோமு, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், இந்திய மருத்துவக் கழகத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் கே.எம்.அபுல்ஹாசன், செயலாளர்
டாக்டர் எஸ். கார்த்திக் பிரபு, பெண் மருத்துவர் பிரிவு செயலாளர் டாக்டர் கிருத்திகா தேவி. முன்னாள் தலைவர் டாக்டர் டி.என். ரவிசங்கர், மாநில நிதிச் செயலாளர் டாக்டர் கௌரி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.