வெள்ளி, 12 ஜூலை, 2024

காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்த வைத்த ஈரோடு எம்பி

காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்த வைத்த ஈரோடு எம்பி

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பழைய பாசன பகுதிகளான காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு அணையில் உள்ள நீர் இருப்பு, பருவமழை மூலம் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து மற்றும் குடிநீர் தேவை ஆகியவற்றை கணக்கில் கொண்டு பாசனத்திற்காக இன்று (12ம் தேதி) முதல் நவம்பர் 8ம் தேதி வரை 120 நாட்களுக்கு 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து, இன்று (12ம் தேதி) காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வாய்க்கால் பாசனத்திற்கான தண்ணீரை ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் தலைமையில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வாய்க்காலில் பொங்கும் நுரையுடன் சீறிப்பாய்ந்த தண்ணீருக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் கூறியதாவது, 2024-2025ம் ஆண்டு முதல் போக பாசனத்திற்கு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் அணைக்கட்டு வழியாக வாய்க்காலில் உள்ள 15,743 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், வரும் நவம்பர் 8ம் தேதி வரை 120 நாட்களுக்கு 5184.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது, அணையின் தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினைப் பொறுத்து, தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் திருமூர்த்தி, மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் பி.கே.பழனிசாமி, ஈரோடு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பிரகாஷ், உதவி செயற்பொறியாளர் உதயகுமார், உதவி பொறியாளர்கள் தினகரன், சபரிநாதன், பூபாலன், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொடிவேரி அணைக்கட்டில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

கொடிவேரி அணைக்கட்டில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

2024-2025ம் ஆண்டு முதல் போக பாசனத்திற்கு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை வாய்க்காலில் உள்ள பாசன நிலங்களுக்கு இன்று (12ம் தேதி) முதல் நவம்பர் 8ம் தேதி வரை 120 நாட்களுக்கு 8,812.80 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து, இன்று (12ம் தேதி) கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கட்டில் இருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு கோபி கோட்டாட்சியர் கண்ணப்பன் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ் தண்ணீர் திறந்து வைத்தார்.

இதன், மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், அந்தியூர் மற்றும் பவானி வட்டத்திலுள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். வரும் நவம்பர் 8ம் தேதி வரை 120 நாட்களுக்கு 8812.80 மில்லியன் கன அடிக்கு மிகாமல், அணையின் தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினைப் பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் நவமணி கந்தசாமி, உதவி செயற்பொறியாளர் கல்பனா, கோபி வட்டாட்சியர் கார்த்திக், பேரூராட்சி தலைவர்கள் சிவராஜ், தமிழ்மகன்சிவா, தமிழ்செல்வி, வெற்றிவேல், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், டி.என்.பாளையம் ஒன்றிய திமுக செயலாளர் சிவபாலன், கொடிவேரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் தளபதி உட்பட கோபிசெட்டிபாளையம், வாணிப்புத்தூர் உதவி பொறியாளர்கள், பாசன விவசாய சங்க தலைவர்கள், விவசாய பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

SDCBA அவசர பொதுக்குழு கூட்டம். SBA சங்க கூட்டத்தில் நடந்த விவகாரம் தொடர்பாக அவசர தீர்மானங்கள் நிறைவேற்றம்.

SDCBA அவசர பொதுக்குழு கூட்டம். SBA சங்க கூட்டத்தில் நடந்த விவகாரம் தொடர்பாக அவசர தீர்மானங்கள் நிறைவேற்றம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

SBA மற்றும் SDCBA உறுப்பினர்களிடையே மோதல் போக்கை உருவாக்கும் வண்ணம் நமது முன்னாள் சங்க உறுப்பினர் பேசிய விவகாரம்.... இந்த பிரச்சனை தொடர்பாக வரும் 15ஆம் தேதி அனைத்து உறுப்பினர்களிடமும் கருத்து கேட்டு கூட்டம்... SDCBA அவசர பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.....

சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. SDCBA தலைவர் ஜெ.மு. இமயவரபன் தலைமையில் நடைபெற்ற இந்த அவசர பொதுக்குழு கூட்டத்தில் செயலாளர் முருகன் மற்றும் பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. 
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளுக்கு சோக்காஸ் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் மற்றும் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நேற்று நடைபெற்ற சேலம் வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பேசி சேலம் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்களுக்கு இடையே மோதல் போக்கை உருவாக்கு வண்ணம் நடந்த முன்னாள் நமது சங்க உறுப்பினர் பேசியது குறித்தும், முப்பெரும் குற்றவியல் சட்டங்களில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க அவசர செயற்குழு இன்று கூடியது அது மட்டுமல்லாமல் இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்த பிரச்சனைகள் குறித்து அனைத்து உறுப்பினர்கள் இடையேயும் கருத்துகளை அறிய வருகின்ற 15. 7.2024 அன்று நமது சங்கத்தின் செயற்குழு கூடுவது என்றும் இந்த கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. 
அதுமட்டுமில்லாமல் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ள செயற்குழு கூட்டம் தொடர்பாக அதன் அறிவிப்பையும் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தகவல் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. 
இந்த அவசர பொதுக்குழு கூட்டத்தில், சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் சரவணன், துணை செயலாளர்கள் ரத்தினவேல் மற்றும் ஜோதி, நூலகர் மணிவண்ணன், செய்தி தொடர்பாளர் திருநாவுக்கரசு என பொதுக்குழு உறுப்பினர்கள் சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டப் பணிகள்.. இல்லம் தேடி எம்எல்ஏ திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் நேரில் ஆய்வு..

20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டப் பணிகள்.. இல்லம் தேடி எம்எல்ஏ திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் நேரில் ஆய்வு..

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

இல்லம் தேடி MLA திட்டத்தின் கீழ் மந்திவளவு காட்டூர் பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை.. மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் தொடங்கி வைத்தார். 

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு கருக்கல்வாடி ஊராட்சி, சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் மந்திவளவு பகுதியில் இல்லம் தேடி MLA திட்டத்தின் கீழ் மக்கள் குறைகளை கேட்க சென்றார். அப்பொழுது, அந்த பகுதி மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் குடிநீர் பஞ்சம் நிலவி வருவதாகவும், கோடை காலங்களில் குடிநீரின்றி மிகுந்த கஷ்டப்படுவதாகவும் தெரிவித்தனர். இதனை அடுத்து சில மேற்கு தொகுதி சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து தருவதாக உறுதி அளித்து இருந்தார். 

அது நடைபெறையில் தொகுதி மேம்பாட்டில் இருந்து 10 லட்சம் ரூபாய் நிதி உதவி ஒதுக்கீடு செய்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பணிகளை பொதுமக்களுடன் இணைந்து தொடங்கி வைத்தார். 

பின்னர் அந்த பகுதியில் சிறப்பாக பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு சால்வைகளை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். 

பின்னர் கே ஆர் தோப்பூர் பேருந்து நிலையத்தில் இளம்பிள்ளை சாலையில் நிழற்குடை இல்லாமல் பொதுமக்களும் பள்ளி குழந்தைகளும் முதியவர்களும் மற்றும் பயணிகள் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அது மட்டுமில்லாமல் இங்கு பேருந்து நிழல் கூடம் அமைத்து தர வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் இடம் கோரிக்கையை வைத்ததை அடுத்து, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தரமான முறையில் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். 

இந்த நிகழ்ச்சியில் தாரமங்கலம் ஒன்றியக் குழு தலைவர் பாபு, மாவட்ட அமைப்பு செயலாளர் சரவண கந்தன், கருக்கல்வாடி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், மாவட்ட துணை செயலாளர் தங்கராசு உட்பட கட்சியின் முக்கிய நிர்வாக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

வியாழன், 11 ஜூலை, 2024

ஈரோட்டில் தனியார் கடையின் குடோனில் பயங்கர தீ விபத்து: விண்ணை தொட்ட கரும்புகை

ஈரோட்டில் தனியார் கடையின் குடோனில் பயங்கர தீ விபத்து: விண்ணை தொட்ட கரும்புகை

ஈரோடு பேருந்து நிலையம் அருகே சத்தி சாலையில் பரணி பைப்ஸ், டியூப்ஸ் என்ற மொத்த விற்பனை கடையை ராவணன் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த கடையின் பின்புறம் பெரிய அளவில் குடோன்கள் செயல்பட்டு வருகிறது. இதில், வீட்டிற்கு தேவையான பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் தொட்டிகள், அதன் மூலப்பொருட்கள் என கோடி ரூபாய் மதிப்பில் பொருட்கள் உள்ளன.
இந்நிலையில், இன்று (11ம் தேதி) காலை சுமார் 10 மணியளவில் வழக்கம் போல் கடையில் ஊழியர்கள், வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். கடையின் ஒரு இடத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதை அணைக்கும் முயற்சியில் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர். அதற்குள் தீ மளமளவென அடுத்தடுத்த இடங்களில் பரவியது. இதனால் கரும்புகை விண்ணை தொடும் அளவில் வெளியேறியது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் அடுத்தடுத்த இடங்களுக்கு பரவியதால் கூடுதலாக ஈரோடு, பவானி, பெருந்துறை, மொடக்குறிச்சி என 6க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமையில் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த கரும்புகை 2 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு பரவியதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

தொடர்ந்து, தீயணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதால், குடோனின் சுவர்கள் இடித்து இடித்து தீயணைக்கும் பணி நடைபெற்றது. இதற்கிடையில் தீ விபத்தை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் கடை முன்பு கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் பின்னர் அதிக அளவில் போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தி தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இதனிடையில், தீ விபத்து குறித்து கேள்விப்பட்டதும் அமைச்சர் முத்துசாமி, ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு எம்பி பிரகாஷ் எம்பி, எம்பி அந்தியூர் செல்வராஜ், மேயர் நாகரத்தினம் உட்பட அரசு அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

சுமார் 12 மணி நேர போராட்டத்திற்கு பின், இரவு 10 மணிக்கு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் ரூ.10 கோடி மதிப்பீட்டிலான கட்டுமான உதிரி பாகங்கள் எரிந்து சேதமடைந்ததாக கருதப்படுகிறது. மேலும், கடை முழுவதும் சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசார், வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தண்ணீர் குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தண்ணீர் குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஒட்டப்பாளையம் ஊராட்சி நல்லதம்பி காட்டுகொட்டாய் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நான்கு தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.
இதனிடையே, ஒட்டபாளையத்தில் இருந்து நல்லதம்பிகாட்டுகொட்டாய் செல்லும் வண்டிபாதையை சிலர் ஆக்கரமித்துள்ளனர். இதனை சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர், மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். ஆனால், இது சம்பந்தமாக யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், இன்று (11ம் தேதி) அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த நல்லதம்பிகாட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அந்தியூர் வட்டாட்சியர் கவியரசிடம் மீண்டும் ஒரு மனுவை அளித்தனர். அந்த மனுவை பெற்ற வட்டாட்சியர், இந்த இடத்தை வந்து சர்வே செய்து, அதன் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

ஆனால், பொதுமக்கள் நாங்கள் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், நடவடிக்கை எடுக்கும் வரை, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிக்கொண்டு, இரண்டு தண்ணீர் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உலக மக்கள் தொகை தினம்: ஈரோட்டில் விழிப்புணர்வு பேரணி, வாகனத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்

உலக மக்கள் தொகை தினம்: ஈரோட்டில் விழிப்புணர்வு பேரணி, வாகனத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்

ஈரோட்டில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (11ம் தேதி) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியைத் தாண்டியதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ம் நாளை மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகளைப் பற்றியும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதின் அவசியத்தைப் பற்றியும் நாட்டு மக்களிடையே எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சரியான வயதில் திருமணம் (21 வயதிற்கு மேல்) மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு இடையிலான பிறப்பு இடைவெளி (குறைந்தது மூன்று ஆண்டுகள்) ஆகியன தாய் மற்றும் சேய் நலனில் முக்கிய பங்காற்றுகின்றன என்பன குறித்த விழிப்புணர்வு, இளம் வயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்பு மற்றும் கருத்தடை முறைகள் பற்றியும் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, இன்று (11ம் தேதி) முதல் ஜூலை 24ம் தேதி வரை அனைத்து வட்டாரங்களிலும் குடும்ப நல முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (11ம் தேதி) நடைபெற்றது. இதனை, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து, உலக மக்கள் தொகை நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார். மேலும், உலக மக்கள் தொகை தினத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு குறித்த கையேடு மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார். அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர் பயிற்சி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற குடும்ப நல விழிப்புணர்வு பேரணி மற்றும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் செவிலியர் கல்லூரியை சேர்ந்த மாணவ,மாணவியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் நவீன வாசக்டமி செய்து கொள்வோம். பெண்களின் சுமையை குறைப்போம், முதல் குழந்தை அவசியம், இரண்டாவது குழந்தை ஆடம்பரம், மூன்றாவது குழந்தை ஆபத்து, ஆணும், பெண்ணும் சமம், ஆண்களே ஏற்பீர் குடும்ப நலம், ஆண் அறுவை சிகிச்சையை ஊக்குவிப்போம், இளம் வயது திருமணத்தை தடுப்போம், பெண்ணுக்கு ஏற்ற திருமண வயது 21 உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

இப்பேரணியானது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி காலிங்கராயன் இல்லம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (நலப் பணிகள்) அம்பிகா, துணை இயக்குநர்கள் சோமசுந்தரம் (சுகாதாரப் பணிகள்), கவிதா (குடும்ப நலம்) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.