ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (15ம் தேதி) நடைபெற்றது.
இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வேண்டி, தனியார் நிறுவனம் மீது மோசடி குறித்து, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 278 மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் செய்த, மொடக்குறிச்சி ஒன்றியம் கருந்தேவன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு பயிலும் மாணவன் கிஷோருக்கு, உடனடி தீர்வாக ரூ.2,770 மதிப்பிலான காதொலி கருவியினை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.