செவ்வாய், 16 ஜூலை, 2024

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களிடம் சுமார் 2 கோடிவரை  பண மோசடி

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களிடம் சுமார் 2 கோடிவரை பண மோசடி

சேலம்.

S.K. சுரேஷ்பாபு.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களிடம் சுமார் 2 கோடிவரை  பண மோசடி.. பாதிக்கப்பட்டவர்களுடன் கூட்டு நடவடிக்கை குழு சேலம் CCB காவல் நிலையத்தில் புகார்...

சேலம்- நாமக்கல் மாவட்டங்களை சார்ந்த ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு ஊழியர்களிடம் அமேசான் நிறுவனத்தில் பண முதலீடு செய்தால் குறைந்த காலத்தில் இரட்டிப்பு பணம் பெறலாம் என்ற ஆசை காட்டி நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த கனகராஜ்  மனோகரன், கந்தசாமி  ஆகியோர் சுமார் 100 ஓய்வூதியம் பெறும் நபர்களிடம் கிட்டதட்ட  2 கோடி வரை பண மோசடி செய்துள்ளனர். பாதிக்கபட்ட ஓய்வூதியர் ஊழியர்கள் கூட்டு நடவடிக்கை குழ - தொழிலாளர் விடுதலை முன்னணி நிர்வாகி தி்ரு சரஸ்ராம்ரவி மற்றும் ராஜசேகர்  ஆகியோரிடம்  அளித்த புகார் அடிப்படையில் பண மோசடி கும்பலை  கைது செய்ய வலியுறுத்தி சேலம் மாநகர்  மத்திய குற்ற பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளிக்கபட்டு விசாரணை துவக்கபட்டுள்ளது.ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள்/ அரசு ஊழியர்கள் கவனமாக தங்களது ஒய்வூதிய பண தொகையை பாதுகாப்பாக வங்கியில் அல்லது நிலங்களில் முதலீடு செய்து பயன் பெறவும்.போலி ஏஜன்டுகள், அங்கிகாரம் பெறாத நிதி  நிறுவனங்களை நம்பி தங்களது பணத்தை அதிக வட்டிக்கு ஆசைபட்டு முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என கூட்டு நடவடிக்கை  குழ ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம்ரவி அவர்கள் வலியுறுத்தி உள்ளார்.


ஈரோடு மாநகராட்சி ஆணையராக நர்னவாரே மணீஷ் சங்கர்ராவ் நியமனம்

ஈரோடு மாநகராட்சி ஆணையராக நர்னவாரே மணீஷ் சங்கர்ராவ் நியமனம்

ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக வி.சிவகிருஷ்ணமூர்த்தி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதி முதல் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தியை, சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையாளராக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டார்.

இதனையடுத்து, நிர்வாக பணிகளை ஈரோடு மாநகராட்சி துணை ஆணையாளராக பணியாற்றி வந்த சரவணக்குமார் மேற்கொண்டு வந்தார். மேலும், ஈரோடு மாநகராட்சி ஆணையர் பணி காலியாக இருப்பதால், நிர்வாக பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க துணை ஆணையர் சரவணக்குமாருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி, நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் சிவராசு கடந்த 13ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கூடுதல் வளர்ச்சி திட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த டாக்டர்.நர்னவாரே மணீஷ் சங்கர்ராவ் ஈரோடு மாநகராட்சியின் புதிய ஆணையாளராக இன்று (16ம் தேதி) நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார். இவர் விரைவில் பொறுப்பேற்பார் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஈரோட்டில் வாகன சோதனையில் பிடிபட்ட குட்காவை பதுக்கிய காவலர்கள் பணியிடை நீக்கம்

ஈரோட்டில் வாகன சோதனையில் பிடிபட்ட குட்காவை பதுக்கிய காவலர்கள் பணியிடை நீக்கம்

ஈரோடு மாவட்டம் பவானியில் பிரபு (வயது 28) மற்றும் சிவக்குமார் (வயது 30) ஆகியோர் போக்குவரத்து காவலர்களாக பணியாற்றி வந்தனர். இவர்கள் கடந்த 12ம் தேதி மாலை பவானி கூடுதுறை அருகே போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 295 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, சரக்கு வாகனம் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போக்குவரத்து காவலர்கள் பிரபு மற்றும் சிவக்குமார் ஆகியோர் நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று அவற்றை பதுக்கி வைத்தனர்.

இதையடுத்து சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் வேனின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில், வாகனத்தின் உரிமையாளர் வாகனம் கடத்தல் மற்றும் குட்கா பதுக்கிய விவகாரம் தொடர்பாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட போக்குவரத்து காவலர்களான பிரபு, சிவக்குமார் ஆகிய இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். இதில் வாகன சோதனையில் பிடிபட்ட குட்காவை ரகசியமாக வேறு இடத்தில் பதுக்கி, டிரைவரிடம் பேரம் பேசி முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது.

இதன்பேரில், போக்குவரத்து காவலர்கள் பிரபு, சிவக்குமார் 2 பேரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டார்.

திங்கள், 15 ஜூலை, 2024

காமராஜர் பிறந்தநாள்: ஈரோட்டில் மாணவர்களுக்கு நலத்திட்டம்

காமராஜர் பிறந்தநாள்: ஈரோட்டில் மாணவர்களுக்கு நலத்திட்டம்

ஈரோட்டில் காமராஜர் பிறந்தநாளையொட்டி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா ஈரோடு திருநகர் காலணியில் உள்ள ஈரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. 

இந்த விழாவிற்கு, இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ப.மீரான் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ப.சலீம் முன்னிலை வகித்தார். ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் அ.சித்திக் விழாவை தொடங்கி வைத்தார்.

 சிறப்பு அழைப்பாளராக தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் க.முஹம்மத் உமர் கலந்து கொண்டார். விழாவில், பள்ளியில் பயிலும் 200 மாணவ, மாணவிகளுக்கு தண்ணீர் பாட்டில், பேனா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

விழாவில், தமுமுக மாவட்ட செயலாளர்  எஸ்.முஹம்மது லரீப், எம்விஎஸ் மாநிலத் துணைச் செயலாளர் இலியாஸ், மமக தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, தமுமுக மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது, மருத்துவ சேவையின் மாவட்ட செயலாளர் சிக்கந்தர், தமுமுக கிளை செயலாளர் ரியாஸ் அஹமத் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

விழா முடிவில் திருநகர் காலனி கிளை தலைவர்  கே.எஸ்.சாகுல் ஹமீது நன்றி கூறினார்.