ஈரோடு மாவட்டம் ஈரோடு வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பல்வேறு அரசு அலுவலகங்களில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார். இந்த திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, மக்களின் சேவைகள், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில், கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து வருகிறார்.
அந்த வகையில், இன்று (18ம் தேதி) ஈரோடு வட்டத்திற்கு உட்பட்ட மண்டலம் 4 மோகன் தோட்டம் பகுதியில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் இருந்து பெறப்படும் வீட்டு கழிவுநீர்களை சுத்திகரிப்பு செய்யப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமானது 50.54 எம்.எல்.டி கொள்ளளவு கொண்டுள்ளது.
தற்பொழுது 25.60 எம்.எல்.டி கழிவுநீர் பெறப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும், கழிவு நீரின் தரம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பின்னர் வெளியேறும் நீரின் தரம் ஆகியவற்றை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, ஈரோடு பாரத வங்கி முக்கிய கிளை சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் கிளை சிறையில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், அலுவலக பதிவறை ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, நசியனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், ஈரோடு அரசு பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனையில் இயன்முறை சிகிச்சை துவக்க நிலை இடையீட்டு அறை, செவித்திறன் சோதனை அறை, அவசர சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, இணை இயக்குநர் (மருத்துவம்) அம்பிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வராஜ், ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜ், மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவக்குமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.