ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையத்தில் அனுமதி இல்லாமல் சூதாட்ட கிளப் நடத்தி வருவதாக சித்தோடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், போலீசார் காலிங்கராயன்பாளையத்தில் சோதனை நடத்தினர்.
அதில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜா (வயது 21), பெலிக்ஸ் (வயது 40), முகிலன் (வயது 22), சேலம் மாவட்டம் சங்ககிரி கல்வடங்கத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 35), துாத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் புதுப்படியை சேர்ந்த சிவக்குமார் (வயது 55), திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 47), வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த அப்துல்சலாம் (வயது 61), நாமக்கல் மாவட்டம், முருக செல்லபெருமாள் ஆகிய 8 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதில், 7 பேரை சுற்றி வளைத்து பிடித்த சித்தோடு போலீசார், கைது செய்தனர். முருக செல்லபெருமாள் தப்பி தலைமறைவானார். மேலும், இவர்களிடம் நடத்திய விசாரணையில், காலிங்கராயன் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட கிளப் நடப்பதும், திமுகவை சேர்ந்த சூரியம்பாளையம் பகுதி செயலாளராக உள்ள குமாரவடிவேல் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, திமுக பகுதி செயலாளர் குமாரவடிவேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 7 பேரை, ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள குமாரவடிவேல், முருக செல்லபெருமாள் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களிடமிருந்து 4 வண்ணங்களில் அச்சிடப்பட்ட, பல லட்சம் மதிப்பிலான 627 டோக்கன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.