ஞாயிறு, 28 ஜூலை, 2024

காவிரி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் முன்னேற்பாடு பணி: ஈரோடு ஆட்சியர் ஆய்வு

காவிரி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் முன்னேற்பாடு பணி: ஈரோடு ஆட்சியர் ஆய்வு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளான பவானி, அம்மாபேட்டை மற்றும் சிங்கம்பேட்டை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தென்மேற்கு பருவமழையினால் மேட்டூர் அணையின் 107.690 கனஅடியை எட்டியுள்ளதையடுத்து, அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆறானது 84 கி.மீ தூரத்திற்கு உள்ளது.

இதில் அந்தியூர், பவானி, ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட சுமார் 24 வருவாய் கிராமங்களும், பவானி நகராட்சியும் அடங்கியுள்ளது. அதனடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய பகுதிகள் கண்டறியப்பட்டு, இப்பகுதியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேவைப்படும் பகுதிகளில் முகாம்கள் அமைத்து, பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் தொடர் மழையின் காரணமாக முக்கிய அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படுவதால், மேட்டூர் அணையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

வருகின்ற ஆடிப்பெருக்கு விழாவில் பவானி, கொடுமுடி உள்ளிட்ட திருக்கோயில்களுக்கு அதிகளவில் வருகை தரும் பக்தர்கள் நீர்நிலைகளில் நீராடுவார்கள். எனவே, இந்துசமய அறநிலைத்துறை மூலம் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் நீர்வரத்து அதிகபடியாக உள்ளதால், ஆற்றில் இறங்குதையோ, குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ தவிர்க்க வேண்டும் எனவும், பொதுமக்கள் பாதுகாப்பாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, பவானி கூடுதுறை பாலம், பழைய பாலம் (பாலக்கரை), கந்தன்பட்டறை ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பசுவேஸ்வர் வீதி, நகராட்சி ஆரம்ப பள்ளியில் தயார் நிலையில் உள்ள முகாமினை பார்வையிட்டு, அங்கு குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், அம்மாபேட்டை பழைய மாரியம்மன் கோவில் வீதியில் காவிரி ஆற்றங்கரையோரம், சிங்கம்பேட்டை, படவல்கால்வாய் ஊராட்சி, பெரியகாட்டூர் பகுதி ஆற்றங்கரை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின் போது, கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தர்மராஜ், பவானி வட்டாட்சியர் தியாகராஜன், அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு, பவானி துணை வட்டாட்சியர் பழனிவேல் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
காவிரி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

காவிரி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

தென்மேற்கு பருவமழையால், சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (28ம் தேதி) நண்பகல் 12 மணியளவில் 107.690 கன அடியை எட்டியுள்ளது. கூடிய விரைவில் அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அணை முழுக்கொள்ளளவையும் எட்டிய உடன் அணையின் நீர் வரத்தினைப் பொருத்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும். இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதன்படி, மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், உபரி நீர் திறந்துவிடும் பொழுது கரையோரமாக வசிக்கும் பொதுமக்களை உடனடியாக மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறும், தங்களது கால்நடைகள் மற்றும் உடமைகளையும் பாதுகாத்துக் கொள்ளும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காவேரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட அனைவரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகள் குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்கள் எடுப்பதையோ முற்றிலும் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், வருவாயத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் சார்பிலும், ஒலிப்பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் 57 வது கோட்ட மக்கள்.. பிச்சை எடுத்துக் கொடுக்கும் பணத்திலாவது அடிப்படை வசதிகளை செய்து தர மாட்டாரா என்று எதிர்பார்ப்பில் இளைஞர்கள் மேற்கொண்ட பிச்சை எடுக்கும் போராட்டத்தால் பரபரப்பு.

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் 57 வது கோட்ட மக்கள்.. பிச்சை எடுத்துக் கொடுக்கும் பணத்திலாவது அடிப்படை வசதிகளை செய்து தர மாட்டாரா என்று எதிர்பார்ப்பில் இளைஞர்கள் மேற்கொண்ட பிச்சை எடுக்கும் போராட்டத்தால் பரபரப்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் அடிப்படை வசதிகளை செய்து தராத திமுக மாமன்ற உறுப்பினரை கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டம்... 57-வது கோட்ட இளைஞர்கள் மேற்கொண்ட நிகழ்வால் பரபரப்பு...

60 கோட்டங்களை உள்ளடக்கியது சேலம் மாநகராட்சி. திமுகவைச் சேர்ந்தவர் மேயராகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் துணை மேயராகவும் இருக்கும் சேலம் மாநகராட்சியின் 60 கோட்டங்களிலும் உள்ள பிரச்சனைகளை தீர்த்து தர வலியுறுத்தி அவ்வப்போது மாநகர மக்கள் சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினரையும் மாநகராட்சி அலுவலகத்திலும் சென்று புகார் மனு அளித்து அதன் வாயிலாக தீர்வு ஏற்படுத்திக் கொள்வது வழக்கம். 
ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேலம் மாநகராட்சியின் 57 வது கோட்டத்திற்கு உட்பட்ட களரம்பட்டி மற்றும் கருங்கல்பட்டி ஆகியவற்றுக்கு உட்பட்ட புலி கார தெரு பகுதியில் சாலை வசதி இல்லாததாலும், குடிநீர் வசதி இல்லாததாலும், சாக்கடை வசதி இல்லாததால் சுற்றுப்புற சுகாதார சீர்கேட்டால் டெங்கு மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவி வருவதாலும், அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுவது தெரு நாய்களின் தொல்லை உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டு பொதுமக்கள் நாள்தோறும் அவதி ஊற்று வருகின்றனர். இது சம்பந்தமாக 57 வது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினரை அணுகி தங்களது பிரச்சினைகளை குறித்து எடுத்துரைத்தாலும் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தராமல் காலம் தாழ்த்தி வருவது தங்களுக்கு வேதனை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சங்கர் கணேஷ் என்பவர் தலைமையில் இளைஞர்கள் 20க்கும் மேற்பட்டோர் இன்று ஒன்று திரண்டு புலிக்கார தெரு பிரதான சாலையில் பிச்சை எடுக்கும்  போராட்டம் மேற்கொண்டு அதன் வாயிலாக கிடைக்கும் தொகை திமுக மாமன்ற உறுப்பினர் கொடுத்து தங்களது பகுதியில் நிலவி வரும் அடிப்படை வசதிகளை செய்தது கொள்ளலாம் என நினைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரைந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். 
சேலம் மாநகர திமுக உறுப்பினரை கண்டித்து இளைஞர்கள் சிலர் பிச்சை எடுக்கும் போராட்டம் மேற்கொண்டது கருங்கல்பட்டி கடதம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பிச்சை எடுக்கும் போராட்டத்திற்கு தலைமை ஏற்ற வழக்கறிஞர் சங்கர் கணேஷ் நம்மிடைய கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளாக இந்த 57வது கோட்டத்திற்கு மாமன்ற உறுப்பினராக வந்த அதிமுகவோ திமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களோ தங்களின் பிரச்சனைக்கு இதுவரை செவி சாய்க்காமல் எந்த விதமான அடிப்படையை வசதிகளையும் செய்து தரவில்லை என்று குற்றம் சாட்டியத்துடன் இனியும் காலம் தாழ்த்தினால் 57வது கோட்ட பொதுமக்களை ஒன்றிணைத்து சேலம் மாநகராட்சி அலுவலகத்திற்கு அருகே மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

சனி, 27 ஜூலை, 2024

சிறந்த சமூக சேவைக்காக பல்வேறு விருதுகளை பெற்று குவித்துள்ள சேலம் சமூக ஆர்வலருக்கு கௌரவ முனைவர் பட்டம்.

சிறந்த சமூக சேவைக்காக பல்வேறு விருதுகளை பெற்று குவித்துள்ள சேலம் சமூக ஆர்வலருக்கு கௌரவ முனைவர் பட்டம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

OXFAA பல்கலைக்கழகத்தின் சார்பில் சேலம் சமூக ஆர்வலர் Dr. நாகா.அரவிந்தன் அவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு..

தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பின் தலைவரும், ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவருமான Dr. அரவிந்தன் அவர்களின் சிறந்த சமூக பணியினை பாராட்டி பல்வேறு பல்கலைக்கழகங்கள் அமைப்புகளின் சார்பில் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக, ஆக்ஸ்ஃபா (Oxfaa) பல்கலைக்கழகம் சார்பாக தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு மாநில தலைவர்  நாகா ஆர்.அரவிந்தன் அவர்களுக்கு இன்று சென்னையி்ல் நடைபெற்ற விழாவில் சிறந்த சமூக சேவைக்கான முனைவ‌ர் பட்டம் பல்கலைக்கழக நிறுவனர் நல்லமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் நிதியின் குரல் ஆசிரியர் பாஸ்கரன் மற்றும் கக்கன் அவர்களின் பேத்தி இமையா கக்கன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சேலத்தைச் சேர்ந்த டாக்டர் நாகா. அரவிந்தன் அவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவம் செய்தனர்.
சிறந்த சமூகப் பணி செய்ததை கௌரவிக்கும் விதமாக பல்வேறு அமைப்புகளின் சார்பில் 200க்கும் மேற்பட்ட விருதுகளை Dr. நாகா. அரவிந்தன் அவர்கள்  பெற்று குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு அரசு மருத்துவமனையில் முறையாக விசாரிக்காமல் 4 பணியாளர்கள் பணியிடை நீக்கம்: காத்திருப்பு போராட்டம்

ஈரோடு அரசு மருத்துவமனையில் முறையாக விசாரிக்காமல் 4 பணியாளர்கள் பணியிடை நீக்கம்: காத்திருப்பு போராட்டம்

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் க்யூபிஎம்எஸ் என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ், காவலாளி, தூய்மை பணிகள், சமைத்தல், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தப் பணியாளர்களை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்களது சொந்த வேலைகளுக்கும், தாங்கள் வேண்டிய பணிகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், வீடியோ, போட்டோ எடுத்து சமூக வெளியில் விடுவதால் மருத்துவமனை நிர்வாகத்துக்கு மாதம் ஒரு சிக்கல் எழுந்து வருகிறது. 

இதுபற்றி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக விசாரித்து, தவறு செய்யும் மருத்துவர்கள், செவிலியர்களை விட்டுவிட்டு, ஒப்பந்த பணியாளர்கள் மீது பணியிடை நீக்கம், பிற அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம், நிரந்தர பணி நீக்கத்துக்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், பணிகளை முறையாக செய்யாததாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒப்பந்த பணியாளர்கள் சண்முகம், வேலுசாமி, பிரகாஷ், பூங்கொடி ஆகிய 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதுபற்றி விளக்கம் தெரிவிக்கவும், தங்களிடம் முறையாக விசாரிக்காமல் நடவடிக்கை எடுத்ததாக கூறி, உறைவிட மருத்துவர் சசிரேகா அறைக்கு நேற்று முன்தினம் சென்றனர். அவரை சந்திக்க இயலாததால், அறைக்கு வெளியே விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் வேலுசாமி என்பவர் திடீரென மயக்கம் அடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.
இருசக்கர வாகனம் அடிக்கடி பழுது: ரூ.1.36 லட்சம் வழங்க ஈரோடு நுகர்வோர் ஆணையம் உத்தரவு

இருசக்கர வாகனம் அடிக்கடி பழுது: ரூ.1.36 லட்சம் வழங்க ஈரோடு நுகர்வோர் ஆணையம் உத்தரவு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள மேக்கூர் ராஜா வீதியை சேர்ந்தவர் பழனிசாமி. காய்கறி வியாபாரி. இவர், ஈரோடு காரைவாய்க்காலில் உள்ள இருசக்கர வாகன விற்பனை மையத்தில், 2022 ம் ஆண்டு புதிய இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். அதற்கான, தொகை ரூ.1.01 லட்சத்தை முழுவதுமாக செலுத்தி உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அவர் வாங்கிய இருசக்கர வாகனம் பத்து மாதம் கழிந்த நிலையில் அடிக்கடி பழுதானது. வண்டி விற்பனை செய்தபோது ஓராண்டு காலம் எந்த பழுதானாலும் சரி செய்து கொடுக்கப்படும் என்று உத்தரவாதம் தந்துள்ளனர். ஆனால், பழுதுகளை சரி செய்ய இரண்டு ஆண்டுகளில் ரூ.40 ஆயிரம் வரை வசூலித்துள்ளனர்.

இதனால், அவா் ஈரோடு மாவட்ட நுகா்வோா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை நுகர்வோர் ஆணைய தலைவர் பூரணி, உறுப்பினர்கள் வேலுசாமி, வரதராஜ பெருமாள் ஆகியோர் விசாரித்து தீர்ப்பளித்தனர்.

அதில், இருசக்கர வாகனத்தின் முழு தொகையான ரூ.1.01 லட்சம், குறைபாட்டால் புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, ரூ.25 ஆயிரம், வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரமும் சேர்த்து மொத்தம் ரூ.1.36 லட்சத்தை இரண்டு மாதத்திற்குள் பழனிச்சாமிக்கு வழங்க வேண்டும் என இருசக்கர வாகன விற்பனை மையத்திற்கு உத்தரவிட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (29ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (29ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (29ம் தேதி) திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகையால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்காபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பேரோடு மற்றும் மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் வள்ளிபுரத்தான்பாளையம் மின்பாதைகள் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ஸ்ரீநகர், சடையம்பாளையம் ரோடு, வேப்பம்பாளையம், வேப்பம்பாளையம் பிரிவு, குட்டைக்காடு, வள்ளிபுரத்தான்பாளையம், ராசாம்பாளையம், பவளத்தாம்பாளையம், வெற்றிவேல் நகர், குமரன் கார்டன், நஞ்சனாபுரம், அழகாபுரம், அம்மன் கார்டன் மற்றும் அத்தம்பாளையம்.

கோபி அருகே உள்ள அளுக்குளி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- அளுக்குளி, கோட்டுபுள்ளாம்பாளையம், ஆண்டவர் மலை, பூதிமடை புதூர், ஒட்டகரட்டுப்பாளையம், வெங்கமேடு புதூர், சத்தியமங்கலம் பிரிவு, கோரமடை, கரட்டுப்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், கணபதிபாளையம், காசியூர், கோபிபாளையம், அம்பேத்கர் நகர், மூலவாய்க்கால், ராஜீவ்காந்தி நகர் மற்றும் போடிசின்னாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.